இந்த நேரத்தில் இந்த நாட்டு மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வுப் பிரேரணை விவகாரம் தற்போது அவசியமில்லை என்பதால் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு பொருளாதாரத்தைஸ்திரப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாடு இன்னும் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடாத நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமான விடயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு வீழ்ந்திருக்கும் போது வெளிநாட்டு சக்திகளும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் அந்த நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஸ்திரமற்ற நாட்டில் பல்வேறு விடயங்களைச் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பவர்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.