வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 11,333 விவசாயிகளின் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வறட்சியினால் நாடளாவிய ரீதியில் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை இதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.
சிறுபோகத்தில் 06 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிக காணியில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அழிவடைந்த நெற்பயிர்களுக்காக ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதனிடையே, இழப்பீட்டை அதிகரிப்பதற்கான யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.