சகல வரிகளையும் கழித்த பின்னர் சீமெந்தின் விற்பனை விலை, துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்தின் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் நிதி அமைச்சு மற்றும், நகர அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடுகள், நடுத்தர வருமானம் பெறுவோக்கான வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வீடுகளை அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளன.
இது தொடர்பிலும், கட்டுமானத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்தும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அந்த குழு வலியுறுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை தற்போது, நிர்மாணிக்க சுமார் 24 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நிதி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும், வரி அதிகரிப்புக்களின் போது ஏற்படுகின்ற சமூக ரீதியான பாதிப்புக்கள் குறித்து உரிய மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்படாமை பாரிய பிரச்சினையாகியுள்ளது.
அத்துடன், சீமெந்து விலையைக் கண்காணிப்பதற்கும், சம்பந்தப்பட்ட துறையில் தலையிட வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.