ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணைந்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமான தரப்பினருடன்தான் எதிர்க்காலத்தில் பயணிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக்கட்சியில் எதிர்க்காலத்தில் பலர் இணைந்துக் கொள்ளவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின்போது பலர் இணைந்துக் கொள்வார்கள்.
ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜே.வி.பியினருடனோ நாலக கொடஹோவுடனோ ஜீ.எல். பீரிஸுடனோ கூட்டணி அமைத்துக் கொள்ள முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷவை வீழ்த்திய தரப்பினருடன், இணைந்துதான் எதிர்க்காலத்தில் சஜித் பிரேமதாஸவினால் பயணிக்க நேரிடும்.
மக்கள் வீழ்ந்து இருக்கும்போது, தன்னால் அதற்கான சவாலை பொறுப்பேற்ற முடியாது என்பதை சஜித் பிரேமதாஸ முழுநாட்டுக்கும் நிரூபித்துவிட்டார்.
அவர் நாட்டு மக்களுக்கானவர் அல்ல. அந்த சவாலை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஒருவருட காலமாக நாட்டை முன்னேற்றியுள்ளார்.
அடுத்த வருடத்தில் இதனைவிட முன்னேற்றகரமான பாதையில் நாம் பயணிப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டுவரக்கூட அவர்கள் அஞ்சுகிறார்கள்.
நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம். நாம் கட்சி அரசியலுக்கு அப்பாற் சென்று, நாட்டை முன்னேற்றுவது தொடர்பாகவே தற்போது செயற்பட்டு வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.