ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமிக்கதொரு கூட்டணியை ஸ்தாபிக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இப்போது நாட்டில் உள்ளது அரசாங்கமே கிடையாது. அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிக்கும் ஒரு தரப்பினர் தான் நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.
இன்று நாட்டில் இலஞ்ச – ஊழல் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்கள் இடம்பெறாத வகையில் புதிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இதற்காகவே நாம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துகிறோம். ஜே.வி.பி, ஸ்ரீலங்கா கம்யூனிசக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தோற்கடித்து, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாகும்.
இதற்கான பொதுவான வேலைத்திட்டமொன்றை நாம் ஆரம்பித்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமிக்கதொரு கூட்டணியை ஸ்தாபிக்கவும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளோம்.
சரியான நேரத்தில் இதுதொடர்பாக அறிவிப்போம். எவ்வாறாயினும், தற்போது மக்கள் படும் துன்பத்திலிருந்து மக்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.