தரமற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மீண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு, சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சாதாரண கொள்முதல் செயல்முறை, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முறையான ஆராய்ச்சியின்றி, மருத்துவமனைகளுக்கு இந்த மருந்துகளை வழங்குவதற்கும், பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் இவர்கள் அனுமதித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் 109 ஆவது பிரிவைச் சாதகமாகப் பயன்படுத்தி, அவசரகாலச் சட்டத்தின் கீழும் அதன் பிரகாரமும், இலங்கைக்கு மருந்துப் பொருட்களைத் தொடர்ந்து கொண்டு வருவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.