ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தை வழங்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கட்சி பலமடைந்துக் கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துக்கள் தான் பெரும்பாலும் பரப்பப்படுகின்றன.
கட்சியின் 72 ஆவது மாநாட்டை நாம் சிறப்பாக கொழும்பில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பல தரப்பிலிருந்து எமக்கு அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடக்கும் என இப்போதே கூறமுடியாது.
சிலர் மாகாணசபைத் தேர்தல்தான் முதலில் நடக்கும் என்றும் கூறுகிறார்கள்.
எந்தத் தேர்தல் வந்தாலும் நாம் அவற்றுக்கு முகம் கொடுக்க தயாராகவே உள்ளோம்.
மொட்டுக் கட்சியெல்லாம் பொருட்டே கிடையாது.
பொது வேட்பாளராக பொதுச் சின்னத்தில் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்புள்ளது.
நான் மீண்டும் ஜனாதிபதியானால் என்னால் சிறந்த நிர்வாகனத்தை வழங்க முடியும்.
நான் ஜனாதிபதியான காலத்திலும் இதனை நிரூபித்துள்ளேன்.
கடந்த முறை இருந்த அனுபவங்களைக் கொண்டு, அதனையும் விட சிறப்பான நிர்வாகத்தை என்னால் வழங்க முடியும்.
நாம் யாருடனும் தனிப்பட்ட ரீதியாக முரண்பட்டுக் கொண்டது கிடையாது.
கொள்கை ரீதியான பிரச்சினைகளே அன்று காணப்பட்டன.- என்றார்.