வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாலும் மாவட்டத்தின் சுகாதாரத் துறையானது பின்னடைவை சந்தித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செந்தூரன் தெரிவித்தார்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “திருகோணமலை பொது வைத்தியசாலையை பொறுத்தவரையில் 10 விசேட நிபுணர்களும் 20 வைத்திய அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
ஏனைய திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வைத்தியசாலைகளில் இருந்து 5 விசேட நிபுணர்களும் 7 வைத்திய அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக அதிக அளவில் பிரசவங்கள் இடம்பெறும் மாவட்டமான திருகோணமலை, மூதூர் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய அதிகாரி இல்லாததன் காரணமாக சமீப காலத்தில் இரண்டு மரணங்கள் சம்பவித்திருப்பதையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒரு மயக்க மருந்து நிபுணர் மாத்திரமே இப்பொழுது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக பல சத்திர சிகிச்சைகள் தாமதம் அடைவதை தம்மால் அவதானிக்க கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன் மூதூர், கிண்ணியா ஆகிய வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் நாளாந்த கிளினிக் சோதனைகளுக்காக குறைந்தது 300 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கத் தேவையான வைத்தியப்பற்றாக்குறையும் குறிப்பாக இருதய நோய் மற்றும் நீரிளிவு தொடர்பான மருந்துகள் இன்னமும் போதிய அளவு கையிருப்பு இல்லாததன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாகவும்” அவர் இதன்போது குறிப்பிட்டார்.