வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸாரும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான வெலிக்கடை உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற உத்தரவின் கீழ் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
42 வயதான ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பணிப் பெண் கடந்த மே மாதம் 11ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இவர் கடுமையாக தாக்கப்பட்ட காரணத்தினாலேயே உயிரிழந்துள்ளார் என அவரது கணவர் தெரிவித்திருந்த நிலையிலேயே, தற்போது வழங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.