இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, விவசாய அமைச்சு, கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து இன்றைய சந்திப்பின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850க்கு விற்பனை செய்ய முடிந்தாலும், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் உள்ளுர் சந்தையில் ஏற்பட்ட முட்டை விலை அதிகரிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியை 1,250 ரூபாய்க்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை தொழில் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.
முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 91 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படாவிட்டால், நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.