சனல் 4 கூறுவது எல்லாம் உண்மையான விடயங்களாகக் கருத முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சனல் 4 கூறுவது எல்லாம் உண்மையானவை எனக் கூற முடியாது. ஆனால், இவற்றை அப்படியே விட்டுவிடவும் முடியாது.
விசாரணை ஒன்று நடத்த வேண்டும். அரசாங்கம் தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மைகள் முதலில் கண்டறியப்பட வேண்டும். யாரையும் காப்பாற்றவோ அல்லது யாரையும் பிரச்சினைக்குள் தள்ளவோ அன்றி, நேர்மையான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முழுமையான அறிக்கைகள் நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.
இனியும் இவற்றை மூடி மறைத்துக் கொண்டிருக்கக்கூடாது. சர்வதேச விசாரணை ஊடாக உண்மைகள் வெளிவருவதுதான் அனைவருக்கும் நன்மையாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.