செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் குழு நியமிக்கப்படுதல் மற்றும் தெரிவிக்குழு நியமிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செனல் 4 வினால் கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய கிடைத்தது.
அதேபோன்;று அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிய கிடைத்தது.
இன்னுமொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவால் இந்த விசாரணைகள் பாரபட்சம் இன்றி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்த கேலியான முயற்சிகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மட்டுமல்ல அதற்மேல் விசாரணைகளை மேற்கொண்டு தெளிவாக ஆரோக்கியமாக பாரபட்சம் இன்றி ஒழுங்குமுறையான விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
ஆரோக்கியமான சர்வதேச விசாரணை குழுவின் விரிவான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.