ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்த வெற்றியின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியக் கிரிக்கெட் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
இதன்படி 13 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதுவரை ஆசியக் கிண்ணத்தொடரில் இரு அணிகளும் 8 முறை இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. இந்தியா ஐந்து முறையும் இலங்கை மூன்று முறையும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.
இதுவரை இந்தியா 7 சம்பியன் கிண்ணங்களையும் இலங்;கை கிரிக்கெட் அணி 6 சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளன.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இப்போட்டியில் மழைக்குறுக்கிட்டதால், போட்டி 45 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இடைநடுவே மீண்டும் மழைக்குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மொஹமட் ரிஸ்வான் 86 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபீக் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து டக்வத் லுயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 42 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 91 ஓட்டங்களையும் சரித் அசலங்க ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது, குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், இப்தீகார் அஹமட் 3 விக்கெட்டுகளையும் ஷயின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் சதாப் கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வித்திட்ட குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.