”ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், நாடாளுமன்றத்தில் நேற்று (20) தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்துக் கொண்டும், ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டும் ‘பப்ளிசிட்டி’ அரசியல் நடத்தும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு, மக்கள் அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. அதனால்தான் மக்களுக்காக அரசியல் செய்யும் காங்கிரஸ் மீது சொற்கணைகளை தொடுத்து வருகின்றனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஊடக அரசியல் நடத்துவது எமக்கு பிரச்சினை இல்லை. அது அவர்களுக்கு கைவந்த கலை. அதுதான் அவர்களின் கட்சி கொள்கையும்கூட. ஆனால் தமது இருப்புக்காக காங்கிரஸ் மீது அபாண்டமாக பழி சுமத்துவதும், போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அது அநாகரீக அரசியலின் வெளிப்பாடாகும். அதனால்தான் எமக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கொள்கையே இல்லாமல் இரவில் ஒரு புறமும், பகலில் மறுபுறமும் அரசியல் நடத்தும் இவர்கள் முதுகெலும்பு பற்றியும், துணிவு பற்றியும் கதைப்பது கோமாளி அரசியலின் வெளிப்பாடாகும். அறிக்கைகளில் மாத்திரம் அரசியல் நடத்தும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.