உலகின் பிரதான துறைமுகங்களின் வரிசையில் இலங்கை இடம்பிடிப்பதற்கு நாட்டில் புதிய துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி ஜெட்வின் ஹோட்டலில் நேற்றைய தினம் நடைபெற்ற “காலி கலந்துரையாடல் 2023” சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இந்து சமுத்திரம் ஒரு நாகரிகமாகும். இந்த நாகரிகம் தான் உலகின் சிறந்த ஆகமங்களை தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்து சமுத்திரம் என்பது ஆசிய – பசுபிக், இந்து – பசுபிக், மற்றும் ஒரே தடம் – ஒரே பாதை என்று எவருக்கும் சொந்தமில்லாத அரசியல் அமைப்பாகும்.
பிரித்தானிய மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பன இந்து சமுத்திரத்திலேயே சரிவடைந்தன. நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட இந்து சமுத்திர வலயத்தின் அமைதிக்கான யோசனை எம்மிடத்தில் உள்ளது. மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் சமூக – பொருளாதார மற்றும் ஏனைய அணுகுமுறைகள், இந்து சமுத்திரம் தொடர்பான எண்ணக்கரு, ஜகார்த்தா ஒப்பந்தமும் எம்மிடத்தில் உள்ளன.
இவ்வாறு இந்து சமுத்திரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் இருப்பதால், நாம் அரசியல் ரீதியாக ஆசிய – பசுபிக் அல்லது ஏனைய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டவர்கள். நாம் அரசியல் மயமானவர்கள் என்ற வகையில் அரசியல் ரீதியில் சிந்திக்கிறோம்.
அதேபோல் வர்த்தக்கத்திலும் எமக்கான தனித்துவங்கள் உள்ளன. இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய அமைவிடத்தை கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால் வலயத்தின் மிகப்பெரிய விநியோக மத்தியஸ்தானமாக உருவெடுக்கும்.
அதனால் கிழக்கு இந்திய சமுத்திர அபிவிருத்தியின் பிரதிபலன்களை நாமும் அடைந்துகொள்ள முடியும். அதேபோல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆபிரிக்காவுடன் தொடர்புபடுத்தினால் அதனையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற முடியும். எமக்கு துறைமுகங்கள் முக்கியமானதாகும்.
இன்று உலகின் பிரதான துறைமுகங்கள் வரிசையில் டுபாய் துறைமுகம் இணைந்துள்ளது. அதேபோல் மேலும் பல துறைமுகங்களும் இணைந்துள்ளன. இலங்கையும் இந்த போட்டிக்குள் இருக்க வேண்டும் என்பதால் எம்மால் முடியுமாயின் மற்றுமொரு துறைமுகத்தையும் உருவாக்குவோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.