சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தை கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகிலும் இலங்கையிலும் தொடர்பாடல் வளர்ச்சியடைந்ததன் மூலம் மக்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றனர்.
ஆனால் இறுதியில் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றமை ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.
எனவே, சமூக ஊடகங்களை உருவாக்கியவர்களே அதற்கான விதிகளை கொண்டு வந்தனர்.
தற்போது நாட்டிலும் சமூக ஊடகக் கண்காணிப்பின் அவசியம் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகிறது.
நாட்டின் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொலைக்காட்சிச் சட்டத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்படுகின்றன.
அது எவ்வகையிலும் நியாயமான ஊடக வளர்ச்சிக்கு பொருத்தமற்றது.
அவ்வாறென்றால், உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் தகவல் தொடர்பாடலை அல்லது ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும், சட்ட விதி முறைகளை தயாரித்துள்ளன.
சிங்கப்பூரின் தகவல் தொடர்பாடல் ஊடக மேம்பாட்டு அதிகார சபைச் சட்டம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
ஆசியாவிலும், உலகிலும் இலங்கை வலுப்பெற்று நிற்க, ஊடகங்களின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
அரசியலில் ரீதியில் சிந்தித்துப் பார்த்தாலும் கூட, அரசியலில் பொய்களை பரப்பும் கலாசாரம் எமது நாட்டில் மாற வேண்டும்.
அதேநேரம், அத்தியாவசியமான உண்மைகளை மறைக்காமல் இருப்பது குறித்தும் ஊடகங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தகைய கண்காணிப்பு முறை, ஊடகங்களை வலுப்படுத்துமே தவிர ஊடகங்களைக் கட்டுப்படுத்தாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மற்றும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.