கடந்த வெள்ளிக்கிழமை பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு வடமாகாண உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மாகாண மட்டப் பரீட்சை இருந்தது. அந்நாளில் பள்ளிக்கூடம் நடக்குமா? பரீட்சை நடக்குமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் காணப்பட்டது.
இது தொடர்பில் மாகாண நிர்வாகம் தன் பொறுப்பை வலையக்கல்விப் பணிப்பாளர்கள் மீது உருட்டி விட்டது. முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்ற மாகாண அதிகாரிகள் முடிவுகளுக்காக எப்பொழுதும் தங்களிடம் தங்கியிருக்கும் வலையக் கல்வி அதிகாரிகளை நோக்கிப் பொறுப்பை உருட்டி விட்டார்கள்.வலையக் கல்வி அதிகாரிகள் எப்பொழுதும் மாகாணத்துக்குப் பதில் சொல்லவேண்டியவர்கள். அவர்கள் எப்படித் துணிந்து சமோசிதமாக முடிவெடுப்பார்கள்?
இந்த லட்சணத்தில் அதிபர் ஆசிரியர்களைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை.ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பை எப்படி மற்றவர்களிடம் தட்டிவிடலாம் என்று யோசிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு. யாரும் பழியை ஏற்கத் தயாரில்லை. யாரும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. யாரும் பதவி உயர்வை இழக்கத் தயாரில்லை. இதுதான் நிலைமை.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை காலைவரை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும், ஏன் அதிபர் ஆசிரியர்களுக்கு கூட அடுத்தது என்னவென்று தெரியவில்லை. பரீட்சை நடக்குமா என்று கேட்டதற்கு பள்ளிக்கூடம் வந்து பாருங்கள் என்றுதான் பதில் கூறப்பட்டது. முடிவில் பரீட்சை நடந்தது. பரீட்சைகள் நடக்கும் என்ற முடிவு எடுக்கப்பட்டது அன்று காலையில்தான் என்று கூறப்படுகிறது. ஆயின் வடமராட்சி, தென் மாராட்சி, தீவுப் பகுதி போன்ற யாழ்ப்பாணத்தின் தூர இடங்களில் இருந்து வரும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் என்ன முடிவு? இது இரண்டு மாகாணங்களிலும் உள்ள தூரப் பிரதேச பள்ளிக்கூடங்கள் பெரும்பாலானவற்றுக்குப் பொருந்தும்.பொதுப் போக்குவரத்து இல்லையென்றால் அவர்கள் எப்படி வருவது? இப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை பொது முடக்கம் நடந்தது.
கடைகளை அடையுங்கள் பள்ளிக்கூடங்களை மூடுங்கள் என்று அறிக்கை விட்டால்,அதை அப்படியே கட்டளையாக ஏற்று மக்கள் அதன்படி நடப்பார்கள் என்று தமிழ்க் கட்சிகள் நம்புகின்றனவா? தங்களுடைய வார்த்தைகளுக்கு அப்படிப்பட்ட மந்திர சக்தி உண்டு என்று எந்தத் தமிழ்க் கட்சித் தலைவராவது நாடாளுமன்ற உறுப்பினராவது கூற முடியுமா?
எனது கட்டுரைகளில் ஏற்கனவே கூறியிருக்கிறேன். பொது முடக்கம் எனப்படும் ஒரு போராட்ட வடிவமானது ஒரு விதத்தில் ரெடிமேற்றானது. எவ்வாறெனில்,ஏற்கனவே ஸ்தாபிதமாகக் காணப்படும் நிறுவனங்கள், கட்டமைப்புகள் போன்றன ஒத்துழைத்தால் ஒரு முழு முடக்கம் சாத்தியம்.
உதாரணமாக,வர்த்தக சங்கங்களும், சந்தை நிர்வாகங்களும், மீனவ சங்கங்களும் ஒத்துழைத்தால் கடைகள் பெருமளவுக்கு மூடப்படும். தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் ஒத்துழைத்தால் பொதுப் போக்குவரத்தை முடக்கலாம். ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்தால், பாடசாலைகளை முடக்கலாம். பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் ஒத்துழைத்தால் பொது முடக்கத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தலாம். பல்கலைக்கழக மாணவர்கள் ஊரூராக, தெருத்தெருவாகத் திரிந்து அன்றைய தினம் வாழ்க்கையை முடக்கலாம். அதாவது ஏற்கனவே பலமாக இயங்கும் நிறுவனங்கள் ஒத்துழைத்தால், பொதுமுடக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கலாம்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுத்த கட்சிகள் அவ்வாறு மேற்சொன்ன நிறுவனங்களோடு பலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனவா? பொது முடக்கத்துக்கு முதல் நாள் கல்முனை சந்தை வர்த்தகர்கள் அமைப்பு அவ்வாறு தங்களோடு யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று அறிவித்திருந்தது.அதனால் தாங்கள் கடைகளை மூடப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் பொது முடக்கம் நகரங்களைப் பொறுத்தவரை வெற்றி பெற்றது.வடக்கில் பெரும்பாலும் முஸ்லீம் வணிகர்கள் கடைகளை மூடினார்கள்.ஆனால் கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் நிலைமை அவ்வாறல்ல.
சந்தைகள் மூடியிருந்தன.ஆனால்,அருகிலிருந்த வீதிகளில் காலையில் கூடின.பல்பொருள் அங்காடிகள் சில படிவங்களில் அரைக் கதவு, காற் கதவில் திறந்திருந்தன.ஆனால் பாடசாலைகள் பெருமளவுக்கு இயங்கின. பாலர் வகுப்புக்கள் பெருமளவுக்கு நடக்கவில்லை.ஆனால் வளர்ந்த பிள்ளைகள் பாடசாலைக்கு வந்திருந்தார்கள்.
ஆசிரியர் சங்கங்களோடு ஏற்கனவே தெளிவாக உரையாடப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் ஆசிரியர் சங்கங்கள் பொது முடக்கத்திற்கு தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கவில்லை. விக்னேஸ்வரன் மாகாணக் கல்வி அதிகாரிகளோடு கதைத்ததாகவும் ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். அவர்கள் அரச ஊழியர்கள்.மேலதிகாரிகளுக்கே பொறுப்புக் கூறுவார்கள்.அதனால் பாடசாலைகளை அனேகமாக முடக்க முடியவில்லை.
தொடக்கத்திலிருந்தே பொது முடக்கத்துக்கு ஆதரவு இருக்கவில்லை. ஊடகங்களில் எதிர் நிலைக் கருத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டன.சமூக வலைத்தளங்களில் பொது முடக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை விட எதிரான கருத்துக்களே அதிகமாகக் காணப்பட்டன. ஆறு மாத கால இடைவெளிக்குள் இரண்டாவது பொது முடக்கம் இது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு இதே கட்சிகள் ஒரு பொது முடக்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. குறிப்பாக அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் வெற்றி பெறாத ஒரு பின்னணியில், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் மேற்படி கட்சிகள் கடுமையாக வீட்டு வேலை செய்திருக்க வேண்டும்.
இம்முடக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், இக்கட்சிகளின் தலைவர்கள் வவுனியாவில் தண்டவாளத்தில் தலைய வைத்துக்கொண்டு படுத்தால் தொடருந்து ஓடாது. அரச அலுவலகங்களுக்கு முன் நிர்வாகத்தை முடக்கும் விதத்தில் போராடினால், அது அரசாங்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏன் அப்படிப் போராடுகிறார்கள் இல்லை? என்று.அரச நிர்வாகத்தை முடக்கும் போராட்டங்களை,அல்லது சட்டமறுப்புப் போராட்டங்களை நடாத்தினால்,அரசாங்கம் சிலசமயம் கடுமையாக நடந்துகொள்ளும்.அது அதன்விளைவாக சிறை நிரப்புப் போராட்டமாக மாறும்.அல்லது நாடாளுமன்றத்துக்கு முன் தொடர் உண்ணாவிரதம் இருக்கலாம்.
கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலோட்டம் போல உண்ணாவிரதம் செய்யலாம். சாகும்வரையெல்லாம் உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை. தமிழ் மக்கள் உயிரைக் கொடுத்தது போதும். ஆனால் ஒரு நாள் உணவைத் துறக்கலாம். ஒரு நாள் உறக்கத்தைத் தியாகம் செய்யலாம். இவை எல்லாம் சின்னச் சின்னத் தியாகங்கள்தான். கந்த சஷ்டிக்கு,கிறிஸ்தவர்களின் 40 நாள் உபவாசத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப்போல.அதாவது அரசியல் வாதிகள் ரிஸ்க் எடுத்துக் போராடினால் அதற்கு ஒரு விளைவு இருக்கும்.எடுக்கின்ற ரிஸ்க்கிற்கு ஏற்ப அல்லது செய்யத் தயாரான தியாகத்துக்கு ஏற்ப விளைவும் பெரிதாக இருக்கும்.
எனவே கட்சித் தலைவர்கள் தாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருந்தால், பொது முடக்கத்துக்கு அப்பால் புதிய போராட்ட வழிமுறைகளைக் கண்டுபிடிக்கலாம். எந்த ஒரு மக்கள் கூட்டமும் தானாக முன்வந்து போராடாது. ஒடுக்குமுறை தான் மக்களைப் போராடத் தூண்டுகின்றது. ஆயுதப் போராட்டத்தில், போராளிகளின் தாக்குதல்கள் ஒடுக்குமுறையைத் தூண்டிவிடும்.அது போராட்டத்தை வளர்க்கும்.ஆனால் அறவழிப் போராட்டத்தில் மக்களை அரசியல் மயப்படுத்தி, அமைப்பாகத் திரட்ட வேண்டும்.மக்களோடு உயிர்த் தொடர்பைக் கட்டியெழுப்ப வேண்டும்.அதன்பின் வித்தியாசமான, படைப்புத்திறன் மிக்க, தொடர்ச்சியான போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். காந்தி உப்புச் சத்தியாக் கிரகத்தைக் கண்டுபிடித்ததுபோல.