”தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கூறிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்” என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்” என்று நடுத்தெருவில் கூச்சலிட்டுள்ளார். ஆகவே அடுத்து நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு அதிகாரபூர்வமாக, அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பல்லாண்டுகளாக மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளை கூறியும், வன்முறைளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஐசிசிபிஆர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த சட்டமும் பாயவில்லை. இது முடிவுக்கு வர வேண்டும்.
இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடனும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடனும் நான் உரையாடியதோடு கல்லறை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மையை கண்டறியுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால் அனுமதிக்க முடியாது” இவ்வாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.