@athavannews துப்பாக்கிச் சூடுகள் சம்பவங்களால் 31 பேர் உயிரிழப்பு!
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும், பாதாள உலகக் குழுவினரால் 62 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தென் மற்றும் மேல் மாகாணங்களிலேயே அதிகளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக இதுவரை 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 37 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தென் மற்றும் மேல் மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய எட்டு துப்பாக்கி தாரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.
பொதுமக்களையும், வர்த்தகர்களையும் அச்சுறுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்திருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.