உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் எனப்படும் ஆடவர் டென்னிஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இத்தாலியின் டுரினில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் விம்பிள்டன் சம்பியனான கார்லோஸ் அல்கரஸ் தோல்வியடைந்தார்.
அதன்படி ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்ட 20 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இதேவேளை மற்றுமொரு போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச், டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட் டை பிரேக் வரை நீடிக்க அதனை 7-6 என நோவக் ஜோகோவிச் கைப்பற்ற அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஹோல்கர் ரூன் அடுத்த செட்டை 7-6 என கைப்பற்றி சமநிலைப்படுத்தினார்.
இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என கைப்பற்றி உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.
இதேநேரம் ரெட் குரூப் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரரான டானில் மெட்வெடேவ் 6-4 6-2 என்ற செட் கணக்கில் சக ரஷ்ய வீரரான ஆண்ட்ரே ரூப்லேவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.