பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடம் இருந்து தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை கோருவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்துக்கும் தேர்தல் முடிந்த பிறகு முடிவுகள் வெளியிடுவதற்கும் இடைப்பட்ட காலத்தைக் குறைத்தல், மின்னணு வாக்குப்பதிவு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதி, மாகாண சபை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரேநாபர் போட்டியிடுவதற்கும் தெரிவு செய்யப்பட்டால் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து கருத்துகளை கோரியுள்ளது.
மேலும் தேர்தல் நாளில் தேர்தல் தொடர்பான சேவைகளில் ஈடுபடும் பொது, அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குதல், விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் பொருத்தமான கலப்பு தேர்தல் முறை பற்றிய முன்மொழிவுகள், பல கட்சி அமைப்பை வலுப்படுத்துதல், அரசியலில் பணத்தின் பங்கைக் குறைத்தல் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
அத்தோடு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு தலைமையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அரசியல் கட்சிகளின் பங்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பொது விவகாரங்களை மேற்கொள்வதில் தங்களை எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவது போர்னா விடயங்கள் குறித்த முன்மொழிவுகளையும் கோரியுள்ளது.
இவை தொடர்பான முன்மொழிவுகள் அல்லது கருத்துக்களை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் sec.coi@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது இலக்கம் 21, மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவர் கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 என்ற முகவரிக்கு அனுப்ப முடியும் என்றும் அறிவித்துள்ளது.
எழுதப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புத் தகவல் அல்லது தனிப்பட்ட தரவுகள் இரகசியம் பேணப்படும் என்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள தேர்தல் சட்டங்களை ஆராய்ந்து தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது குறித்து தகவல்களைப் பெறுவதற்கும், விசாரணை செய்து அறிக்கை செய்வதற்கும், முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.