ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தினால் (ICFJ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் மற்றும் பௌதீக ரீதியான பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை கடந்த 23.10.2023 முதல் 27.10.2023 ஆம் திகதி வரை களுத்துறை அவானி ஹோட்டலில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தின் (ICFJ) நெறியாளர்களானFrank Smyth மற்றும்Moe Jarju ஆகியோர் இந்த பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
05 நாட்களாக நடத்தப்பட்ட குறித்த பயிற்சி பட்டறையில் சமூக வலைத்தளங்களை பொதுவான ஒரு மனிதன் எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்த முடியும், போர் காலங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் விதம், உள்நாட்டுப் போரின் பின்னர் இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு குறித்து முதல் நாள் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடர் மதிப்பீடுகளின் போது முதலுதவி தொடர்பான விளக்கம், தனிமனித பாதுகாப்பு, சோதனைச் சாவடி நெறிமுறைகள் குறித்து பௌதீக ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டதுடன் போரின் போது ஏற்படும் தீக்காயங்கள், முறிவுகள், சிறப்பு காயங்கள் மற்றும் கண்ணிவெடிகள் தொடர்பிலான விளக்கம்; இயற்கை பேரிடர் திட்டமிடல் மற்றும் முதலுதவி போன்றவற்றின் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் இயற்கை பேரிடர் திட்டமிடல், தீக்காயங்கள் முறிவுகள், தற்பாதுகாப்பு மீட்டல், வீதி போக்குவரத்து விபத்து நெறிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்தின் போது விபத்து ஏற்படும் நேரத்தில் வழங்கப்படும் முதலுதவி தொடர்பான செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது.
இறுதி நாள் அன்று இயற்கை பேரிடரில் ஆபத்தை எவ்வாறு குறைப்பது, போரின் போது ஊடகவியலாளர் எவ்வாறு ஆவணங்களை பாதுகாப்பது மற்றும் இணையவழி பாதுகாப்பு தொடர்பான முழுமையான பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,