2022 மே 9 வன்முறையின்போது வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தீக்கிரையாக்கிய நபர்களிடமிருந்து, நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழங்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் ஆணையை மீறினால்கூட அவர்களை பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.
ஆனால், இதனை காட்டுச் சட்டத்தின் ஊடாக செய்ய முடியாது.
குண்டர்களாலும் அடாவடி தரப்பினராலும் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து நீக்க நாம் இடமளிக்க முடியாது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டம் இன்னும் ஓரிரு நாட்களுக்கு நீடித்திருந்தால்கூட நாடாளுமன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கும்.
அடுத்ததாக நிதிமன்றமும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்.
போராட்டக்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட எத்தனை நபர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தொடரப்பட்டுள்ளது?
முடிந்தால் இந்த வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றங்களை ஏற்படுத்துங்கள்.
வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களுக்கான நஷ்ட ஈட்டை உரிய குற்றவாளிகளிடமிருந்தே பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், எதிர்க்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் இடம்பெறாமல் இருக்கும்.
அப்படி நஷ்டஈடு வழங்காத நபர்களை சிறைக்கு அனுப்புங்கள். இது குற்றச்செயல்களை செய்ய முற்படும் நபர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.
இது தொடர்பாக பொலிஸ{க்கு பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.