சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வழக்கு அண்மையில் (21) அழைக்கப்பட்ட போது, சப்-இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த அதிகாரி திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பன்றி இறைச்சி சோதனையில் ஈடுபட்டார். பிப்ரவரி 26 அன்று பன்றி இறைச்சி சோதனை செய்யப்பட்டது.
இந்த உத்தியோகத்தரின் இந்த மோசடிச் செயல் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த மனுவின் பிரகாரம், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு தெரியவந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.