கீரி சம்பாவிற்கு இணையான அரிசியை 100,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த அரிசி கையிருப்பின் மூலம் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற கண்காட்சியின் போது, கீரி சம்பா தட்டுப்பாடு குறித்து அமைச்சரிடம் பொதுமக்கள் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களுக்குப் பதிலளித்த அமைச்சர், எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு குறிப்பிட்ட அரிசி வியாபாரிகள் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை. நாட்டில் போதுமான அளவு அரிசி மற்றும் நெல் இருப்பு உள்ளது. நெல் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் நெல் இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை. கடந்த பருவத்தில் 07 வீதமான நெற்செய்கை நிலத்தில் கீரி சம்பா பயிரிடப்பட்டது. 5000 மெட்ரிக் டன் அறுவடை கிடைத்தது. ஆனால் கையிருப்பை பாதுகாக்கவும் பராமரிக்கவும் அரசாங்கம் தவறியதன் காரணமாக சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பாவின் விலையை அதிகரிப்பதற்காக நாட்டில் செயற்கை அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.