இலங்கையில் ஒரு நிலையான பாம் எண்ணெய் மரச் செய்கைக் கைத்தொழிலுக்கான உத்திகளை வெளிப்படுத்துவதற்கான செயலமர்வு, கடந்த நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு- பி.எம்.ஐ.சி.எச்.இல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றிருந்தது.
ஸூம் மூலம் இணைந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல நிபுணர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்ததோடு, இலங்கை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் வளவாளர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் சிறிய உரிமையாளர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துக்கொண்டிருந்தனர்.
இலங்கையில் பாம் எண்ணெய் மரச் செய்கை தொடர்பான கொள்கையை மீளாய்வு செய்வதற்கான செயலமர்வை இலங்கை விஞ்ஞான முன்னேற்றத்துக்கான சங்கம் (SLAAS) மற்றும் தேசிய விஞ்ஞான தாபனம் (NSF) என்பன நடாத்தின. ஆசியா பாம் எண்ணெய் மரக் கூட்டமைப்பு (APOA) மற்றும் Solidaridad Asia ஆகியவற்றின் அனுசரணையின்கீழ் நடாத்தப்பட்ட இந்நிகழ்வை நியூக்ளியஸ் அறக்கட்டளை ஒருங்கிணைத்திருந்தது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை அரசாங்கம் பாம் எண்ணெய் இறக்குமதி மற்றும் செய்கைக்கு தடை விதித்ததோடு பாம் எண்ணெய் மரங்களை வேரோடு அகற்றி, ரப்பர் மரங்களை மீண்டும் நடுவதற்கு உத்தரவிட்டது. பாம் எண்ணெய் தொழில்துறையின் எதிர்மறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய கவலைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது 2018ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையானது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கணிசமான நிதி நெருக்கடியை ஏற்படுத்திய பின்னர் விரைவாக மாற்றப்பட்டாலும், பாம் எண்ணெய் செய்கை மீதான தடை அமலில் உள்ளது. பாம் எண்ணெய் இறக்குமதித் தடையை மீளப்பெற்றுக்கொண்டமை புத்திசாலித்தனமான நகர்வாக இருந்தது. இதனால் உள்நாட்டு உணவு மற்றும் இனிப்புப்பண்டத் துறை முகங்கொடுத்த உடனடிச் சவால்கள் தீர்க்கப்பட்டன.
எவ்வாறாயினும், குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்து வரும் நிலையில் பாம் எண்ணெய் உற்பத்திக்கான தடையை நீடிப்பதற்கான முடிவு கேள்விகளை எழுப்புகிறது. இது எண்ணற்ற சிறு விவசாயிகளுக்கு பாம் எண்ணெய் செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்தும். இது அண்டை நாடான இந்தியாவிலும் மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்த உலகளாவிய பாம் எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதத்தை சிறு விவசாயிகளே மேற்கொள்கின்றனர்.
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பாம் எண்ணெய் கைத்தொழில் வழங்கும் மகத்தான வாய்ப்புகளுக்கு மத்தியில், SLAAS மற்றும் NSF ஆகியவை கொள்கையை மீளாய்வு செய்யுமாறு பரிந்தரை செய்கின்றன.
2022ஆம் ஆண்டில், நியாயமான மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளின் முன்னோடியான Solidaridad Asia, பாம் எண்ணெய் மற்றும் அதன் உற்பத்தி பற்றிய கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் ஒரு வெளியீட்டைத் தொடங்கியது. ‘பாம் எண்ணெய் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த வெளியீடு, இந்த விஷயத்தை அறிவியல் ரீதியாக எடுத்துக்கொள்வதுடன், இலங்கையில் இருந்து ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பற்றிய ஆழமான இலக்கிய மதிப்பாய்வின் மூலம் தகவல் மற்றும் மதிப்பீடுகளை வழங்குவதோடு மற்ற பாம் எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி ஆய்வாளர்களால் வழங்கப்பட்ட அறிவியல் சான்றுகளுடன் பூர்த்தி செய்யப்படுகிறது. ‘நிலையான உற்பத்தி’ என்ற தலைப்பிலான இந்த செயலமர்வானது, பிரசுரத்திற்கு பங்களித்தவர்கள் உட்பட சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கை ஆய்வாளர்களை கூட்டி, பாம் எண்ணெய் செய்கை மீதான தடையை மறுபரிசீலனை செய்யும் அடிப்படையிலான தகவல்களை முடிவு எடுப்பவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இலங்கை தற்போது வருடாந்தம் 180,000-220,000 மெட்ரிக் தொன் தாவர எண்ணெயை இறக்குமதி செய்கிறது, இந்தத் தேவையை 50,000 ஹெக்டேர் பாம் மரங்கள் அல்லது 271,000 ஹெக்டேர் தேங்காய் மூலம் பூர்த்தி செய்ய முடியும். குறிப்பிடத்தக்க வகையில், பாம் மரம் ஒரு ஹெக்டேருக்கு கணிசமான அளவு அதிக எண்ணெய் விளைச்சலை தருகிறது. இது தேங்காயை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாகும்.
1968ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றின் அடிப்படையில் இலங்கையில் பாம் எண்ணைய் மரத் தோட்டங்கள் 54 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்க அளப்பரிய சேவை செய்துள்ளன. மேலும் இந்த தோட்டங்களில் மண் சிதைவு மற்றும் நீர் வளங்களின் பற்றாக்குறைக்கான எந்த ஆதாரமும் இல்லை. பொருளாதார ஒப்பீடுகள், பாம் எண்ணைய் தேங்காய் (LKR 315,000), ரப்பர் (LKR 90,000), மற்றும் தேயிலை (LKR 600,000) ஆகியவற்றை பின்தள்ளி ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக LKR 720,000 லாபம் ஈட்டுகிறது.
கூடுதலாக, பாம் எண்ணெய் துறையில் உள்ள தொழிலாளர்களின் மாத ஊதியம் 30,000-50,000 ரூபாய் வரை உள்ளது. இது தேயிலை (LKR 25,000) மற்றும் ரப்பர் (LKR 18,000) தொழில்களில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. மேலும், பாம் எண்ணெய் மரம் நீர் தடம் (1,097 எம்3 தண்ணீர்ஃடன்) தேங்காய் எண்ணெயை விட (2,678 எம்3 தண்ணீர் ஃடன்) குறைவாக உள்ளது. ரப்பர் மற்றும் தேயிலைக்கு இது மிகவும் அதிகமாக உள்ளது, அதாவது முறையே 13,737 மற்றும் 8,856 எம்.3 தண்ணீர் ஃ டன். 50,000 ஹெக்டேர் பாம் எண்ணெய் மரச்செய்கை, மற்ற பாம் எண்ணெய் மரங்கள் வளரும் நாடுகளில் உள்ள அனுபவங்களுக்கு ஏற்ப, கிராமப்புற வறுமையைப் போக்க, சிறு உடமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் 300,000 வாழ்வாதாரங்களை உருவாக்கும் ஆற்றலை இலங்கை கொண்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மேலதிகமாக, இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களையும் திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.
இலங்கைப் பொருளாதாரத்தில் பாம் எண்ணெய் துறையின் முக்கியத்தவத்தைக் கருத்திற்கொண்டு இச்செயலமர்வு மாற்றத்துக்கான ஒரு பெரு ஊக்கியாக எதிர்பார்க்கப்பட்டது.