2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 703 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதில், இந்தியாவில் இருந்து 27 ஆயிரத்து 281 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 382 பேரும், ஜேர்மனியில் இருந்து 11 ஆயிரத்து 680 பேரும் மற்றையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 12 இலட்சத்து 63 ஆயிரத்து 158 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையில், அம்புலுவாவ மலை உச்சியை அடைவதற்காக பல்கலாச்சார பல்லுயிர் வளாக கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை முதலீட்டுச் சபையானது எம்பர் அட்வென்ச்சர்ஸ் மற்றும் சீன நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெக்கானிக்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.
அம்புலுவாவ பல்கலாச்சார மையம், எம்பர் அட்வென்ச்சர்ஸ் இலங்கை நிறுவனம் மற்றும் சீன முதலீட்டாளர்கள் பங்கு உரிமையுடன் இந்த முதலீட்டை மேற்கொள்வதாகவும், முதலீட்டின் பெறுமதி 4.5 மில்லியன் டொலர்கள் எனவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.