“ஜனாதிபதி ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தின் சேதங்களை பார்வையிடச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இங்கே இடம்பெற்றுள்ள தீ விபத்தில் எட்டு வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு , 4 வீடுகள் சிறிய அளவில் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இங்கே ஏறக்குறைய இருபது குடும்பங்கள் வாழ்வதாக அறிகின்றேன். இந்த இருபது குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டிக்கொள்ள தலா பத்து (10) பேர்ச் காணித் துண்டுகள் வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பட்ஜெட் உரையில் பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வீடமைக்க காணி வழங்குவேன் எனக்கூறி, அதற்காக நானூறு கோடி ரூபாயை தனது அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஒதுக்கிக்கொண்டுள்ளார்.
ஆகவே எனது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் கூறியுள்ளார்.