உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தவும், நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இரண்டு மாதங்களாக இஸ்ரேலிய விமானப்படை பாலஸ்தீனத்தில் குண்டுவீசி வருவதாகவும், வடக்கில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த கிராமங்களையும் குடியிருப்புகளையும் விட்டு தெற்கே செல்வதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் அனைத்து பாடசாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் குறிப்பிட்டார்.