போர்நிறுத்தத்தில் இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை கட்டார் தொடரும் என கட்டார் பிரதமர் ஷக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், டோஹா மன்றத்தில் உரையாற்றிய அவர், காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு புதிய போர்நிறுத்தத்திற்கான பாதையை சுருக்குகின்றது எனவும் கூறினார்.
நவம்பர் மாத இறுதியில் வன்முறையில் ஒரு வார கால இடைநிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டதில் கட்டார் முக்கிய பங்கு வகித்தது. இது பணயக்கைதிகளை விடுவிக்கவும் அனுமதித்தது.
இதனிடையே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘போர் முழு வீச்சில் உள்ளது. சமீபத்திய நாட்களில் டசின் கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, எங்கள் வீரமிக்க போராளிகளிடம் தங்களை ஒப்படைத்து வருகின்றனர். இது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்’ என்று அவர் கூறினார்.
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார நிறுவனம் கிட்டத்தட்ட 18,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது.
இதேவேளை, ஹமாஸின் ஆயுதப் பிரிவு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், ‘தற்காலிக போர்நிறுத்தம் அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது என்றும், இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியது.
செய்தித் தொடர்பாளர் அபு உபைடாவும் மேலும் கூறுகையில், ‘ஹமாஸ் போராளிகள் 180 இராணுவ வாகனங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்து, பெரும் எண்ணிக்கையிலான இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதாகவும், அது இன்னும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், கூறினார்.