அடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நீர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் எமக்கு மேலதிக செலவீனங்களையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஓகஸ்ட் மாதம் நீர் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி முதல் நீர் கட்டணம் தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும். வைத்தியசாலை, பாடசாலை, வணக்கஸ்தலங்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் இந் நடவடிக்கை ஆரம்பமாகும். அத்துடன், சூரிய சக்தி பயன்பாட்டையும் 50 வீதம்வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் சுத்தமான – பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு பொருளாதார நெருக்கடியும் தடையாக உள்ளது. எனவே, நிதி திரட்டுவதற்கான மாற்று வழிகள் பற்றியும் ஆராயப்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.