”பிக்மீ சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக” பிக்மீ சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் அ.கலைச்செல்வன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிக்மீ சாரதிகள் மக்களுக்கான சேவையில் ஈடுபடும் போது பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் பிக்மீ சாரதிகளுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது நாங்கள் நீதியை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கச் சென்றோம்.
எனினும் எங்களுடைய முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து இவ்விடயம் குறித்து பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இருந்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எனவே பிக்மீசேவையை எந்தவித தங்குதடையுமின்றி பாதுகாப்புடன் நேர்த்தியான முறையில் செய்வதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
நல்லூர்ப் பகுதியில் அண்மையில் கூட எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்தும் இந்த நிலைமை ஏற்படாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுகளுடன் மக்களுக்கு இலகுவான சேவையை செய்வதற்கு வழியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.