உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம்.
எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.
கோரிக்கையை பரிசீலித்த பிறகு, வரி செலுத்துவோரின் அடையாள எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஜனவரி 01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.