அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்களை அடமானம் வைக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனியொருவனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் தலைவராக வருபவர் சரியான பொருளாதார மற்றும் நிர்வாகப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விருந்த பல முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களை கட்சி நிராகரித்துள்ளது.
ஊழல்வாதிகள் அற்ற மற்றும் இன மத வாதங்கள் இல்லாதவர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி உருவாக்கும் அரசாங்கத்தில் நியாயமற்ற வரிக் கொள்கை திருத்தப்படும்.
மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வரிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஊடாகச் செயற்படும்.
நாட்டையும் மக்களையும் வங்குரோத்தாக்கிய குழுவினரை பாதுகாக்கும் பக்க பலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.