வளர்ந்துவரும் சிம்பாப்வே கிரிக்கெட் அணியை சுலபமாக எண்ணிவிடக் கூடாது என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான ஊடக சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ், பல விடயங்களை தெளிவுப்படுத்தியிருந்தார்.
முழுநேர அணித்தலைவராக பதவியேற்றுள்ள குசல் மெண்டிஸ், புதிய தேர்வுக்குழுவுடன் சிறந்த புரிந்துணர்வு உள்ளதாகவும் கடந்த காலங்களில் உபுல் தரங்க, கண்டம்பி மற்றும் சனத் ஜயசூரியவுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சதீர சமரவிக்ரம உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்த தொடரில், சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், கடந்த காலங்களில் களத்தடுப்பில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்வரும் தொடரில் சிறப்பாக விளையாடுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார். (குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில், இலங்கை அணி வீரர்கள் 16 பிடியெடுப்புகளை தவறவிட்டிருந்தனர்)
அதேபோல, கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்காத முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக, அதே துடுப்பாட்ட வரிசையில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், முன்னர் அவர் உபாதையில் இருந்ததே சிறப்பாக பிரகாசிக்க தவறியமைக்கு காரணம் எனவும் மெண்டிஸ் தெளிவுப்படுத்தினார்.
எனினும், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் வழமை போல 3ஆவது வீரராகவே களமிறங்கவுள்ளதாகவும் பெரும்பாலும் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறினார்.
ஒருநாள் தொடரில், இடம்பெறாத சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக, சஹான் ஆராச்சிகே அல்லது நுவனிந்து பெனார்டோ ஆகியோரில் ஒருவர் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
உபாதையில் இருந்து மீண்டுள்ள ரி-20 அணியின் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, 2 அல்லது 3ஆவது போட்டியில் அணியுடன் இணைவார் எனவும் நீண்ட காலத்துக்கு பிறகு அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள ஜெப்ரி வெண்டர்சே கடந்த காலத்தை விட தற்போது சிறந்த நிலையை எட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிம்பாப்வே கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.