யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும்.
யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.