கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவிலேயே சடலம் பொது மக்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடுவல, வெலிவிட்ட புனித அந்தோனியார் வீதியில் வசித்துவந்த 9 வயதுடைய சிறுவன், களனி கங்கையில் நீராடியபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற் போயிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை தனது பாட்டி மற்றும் சகோதரருடன், குறித்த சிறுவன் நீராடியபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, கடுவலை பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து, முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதி வாழ் மக்களும் இதற்கான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். எனினும், கடற்படையினரால் குறித்த சிறுவனை தேடும் நடவடிக்கையை தொடர முடியாமல் போனதையடுத்து, இளைஞர்கள் உள்ளிட்ட அப்பகுதி வாழ் மக்கள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், காhணமல் போன சிறுவனின் சடலம், நேற்று இரவு பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள, அப்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமானது கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டு, இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் பிறந்த திஸ்ன பிரமோத் பெரேரா என்ற சிறுவனே இந்த துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.