பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தும் இந்த தற்காலிக முகாமில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் கடந்த வருடம் தீவிற்கு விஜயம் செய்தனர். இரண்டு வருட தடுப்புக்காவலின் பின்னர் குடியேற்றவாசிகளுக்கு தீவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், நீண்டகால தீர்வை எதிர்பார்த்து வருவதாக பிரித்தானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
2021 அக்டோபரில் கனடாவுக்குச் செல்ல முயன்றபோது படகு விபத்துக்குள்ளானதை அடுத்து, முதல் புலம்பெயர்ந்தோர் குழு டியாகோ கார்சியாவில் தரையிறங்கியது.
டியாகோ கார்சியாவில் உள்ள அகதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, சுமார் 60 பேர் தீவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.