இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டாலும் பொருளாதாரத்தின் மீட்சி என்பது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த 9 நாள் பயணம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் இன்று பிற்பகல் இலங்கை மத்திய வங்கியில் விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்,
இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள்
நம்பிக்கை அளிக்கின்றன.
எனினும் இந்தச் சூழலில், சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவது மற்றும் அனைத்து திட்ட உறுதிப்பாடுகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.
அதுவே எமது நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும். ஆனால் எல்லாத் திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமையவேண்டும்.
நியாயமான சுமைப் பகிர்வை உறுதிசெய்வது மிக முக்கியமானது.
வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வரி விலக்குகளை நீக்குதல் மற்றும் சீர்திருத்தங்களை மேலும் நிலையானதாக மாற்றவேண்டும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் வெற்றியைக் கட்டியெழுப்புவதுடன், எதிர்கால நாணயக் கொள்கை முடிவுகள் பணவீக்க எதிர்பார்ப்புகளை நன்கு நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டே இலங்கையின் விவேகம் அமையவேண்டும்.
கடனை நிலைநிறுத்துவதற்கான பாதையில் இலங்கை அதிகாரிகள் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நிறைவேற்றுவது ஒரு முக்கியமான மைல்கல் என்பதே எமது நிலைப்பாடு.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான விஜயம் பற்றி குறிப்பிடவேண்டும்.
இந்த விஜயத்தின் போது எமக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்திருந்தது. அதற்காக வடக்கு கிழக்கிலுள்ள அதிகாரிகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த விஜயம் இலங்கையின் சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றிய குழுவின் புரிதலை அதிகமாக்கியுள்ளது.
நெருக்கடியிலிருந்து முழுமையான பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்” என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.