சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே- பிரான்சேவிற்கும் நீதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நீதியமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் நீதிச் செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் விஜயதாச ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்கள், சர்வதேச தரத்திற்கு ஏற்பவும், வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கும் அடிப்படையிலும் உருவாக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான, இலங்கையின் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் மிகவும் முக்கியமானவை எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் மனநல ஆணைக்குழுவின் அனுபவம் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.