இலங்கையில் புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான 13 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது.
அமெரிக்க தொண்டு நிறுவனமான LDS – Latter – day saints charities உடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற மருந்துகளின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட இந்த அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் ஒரு வருடத்திற்கு புற்றுநோய் சிகிச்சைக்கு போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாவது கட்டத்தின் கீழ், அடுத்த சில மாதங்களில் நாட்டிற்குத் தேவையான மற்றுமொரு மருந்துப் பொருட்களை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை நாட்டு மக்களுக்கு முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சேவையாக சிறந்த சுகாதார சேவையை அரசாங்கம் வங்கி வருவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இலங்கையில் சிறந்த சுகாதார சேவையை பேணுவதற்கு அனைத்து சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.