இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை சபாநாயகர் அமுல்ப்படுத்தியதன் மூலம் நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை 93 ஆண்டுகளாக பேணிப் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அதனை மீறியுள்ளார்.
அண்மையில் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் இணையவழி பாதுகாப்பு சட்டம் மிகவும் பயங்கரமான ஒன்றாகவே கருதப்படுகின்றது.
மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன இந்த சட்ட நடைமுறையின் பின்னர் கேள்விக்குறியாகின்றது.
இந்த சட்டத்தை அமுல்ப்படுத்திய விதம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சட்டம் திருத்தப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் திருத்தம் மேற்கொள்ளவேண்டிய 13 பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்தது.
அதன்பின்னர் 3 இல் 2 பெரும்பான்மையுடனேயே நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த பரிந்துரைகள் எவையும் முழுமையாக செவிசாய்க்காமல் சபாநாயகர் அதனை மீறி சட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளார்” என ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.