மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் வெண் ஈ யின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலைகளின் பின்புறம் ஒரு சோடி இறக்கை கொண்ட நுளம்பு அளவிலான வெண் ஈக்கள் வாரம் ஒன்றுக்கு சுமார் 100 முட்டைகள்வரையிட்டு தென்னை ஓலையின், பச்சயத்தை சாப்பிடுவதால் ஓலைகள் காய்ந்து வெண்மையாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் எச்சங்கள் நாவல், கருப்பு நிறமாக தென்னையின் கீழுள்ள மரங்களின் இலைகளிலும் விழுவதனால் அவை முதலில் கரும்புள்ளியாக மாறி பின்பு பூஞ்சன நோயின் தாக்கத்தினால் மண்ணிறமாக காய்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் வெண்ணிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஓலைகளை முழுமையாக வெட்டி எரித்து விடுகின்றனர்.
ஆனால் தென்னை காய்ப்பதற்கு குறைந்தது 10-15 ஓலைகள் அவசியம் என்பதால் ஓலைகளை வெட்டுவது பெரும் பாதிப்பையும் நஷ்டத்தையும் ஏற்படுத்துவதாகவும் மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவித்தள்ளனர்.
குறிப்பாக தென்னை மரங்களில் அதிகம் பரவியிருந்த வெண் ஈக்கள் தற்போது அனைத்து வகையான தாவரங்களிலும் பரவியுள்ளதோடு அதிகளவு இனப்பெருக்கத்தையும் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும், வெண் ஈக்கள் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் இந்த நோய் தாக்கத்தை சாதாரண ஒன்றாக கடந்து செல்லாது தேசிய அனர்த்தமாக கருதி இதனைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.