மகளிர் தினமான இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் 7 வருட பூர்த்தியினை முன்னிட்டும் இப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு ஜெறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?, சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா? உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.