தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்;களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தி.மு.க. அரசு பதவியேற்ற 33 மாதங்களில் பொலிஸ் நிலைய உயிரிழப்புக்கள் மற்றும் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகிய உயிரிழப்புக்கள் என சுமார் 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக் கைதிகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் பற்களை பிடுங்கிய சம்பவமொன்று நடந்துள்ளது.
அதேபோன்று, அதே மாவட்டத்தில், சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற சுற்றுலா வாகன சாரதி ஒருவர் விபத்தை ஏற்படுத்தியதற்காக சில பொலிஸ் அதிகாரிகள் அவரை வேனிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட குறித்த சாரதிக்கு முதலுதவிகூட அளிக்காமல், தனியார் வைத்தியசாலையின் வாகனத்தில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றதனால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
எனவே, இந்த அரசை பொலிஸாருக்குமன ரீதியிலான பயிற்சி அளிக்க வலியுறுத்துகிறேன்.
மேலும் முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், முருகனின் மனைவிக்கு அவரது தகுதிக்கேற்ப அரச வேலையொன்று வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.