லண்டன் ‘பேங்க் ஆப் இந்தியா” வங்கிக்கு, 66.40 கோடி ரூபாயை திருப்பி செலுத்துமாறு, இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீரவ் மோடி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் அமைந்துள்ள நீரவ் மோடியின், ‘பயர்ஸ்டார் டைமண்டு’ நிறுவனத்துக்கு, பேங்க் ஆப் இந்தியா சுமார் 83 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இந்தக் கடனை கடந்த 2018ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்துமாறு வங்கி கேட்டுள்ளது. எனினும் நீரவ் மோடியால் இந்தகடனை திருப்பிச் செலுத்த முடியாமல்போனது.
இந்நிலையிலேயே லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பேங்க் ஆப் இந்தியா, மொத்தம் 66.40 கோடி ரூபாவை திரும்ப பெற்று தருமாறு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கிக்கு இத்தொகையை திருப்பிச் செலுத்துமாறு நீரவ் மோடிக்கு உத்தரவிட்டு உள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் உள்ள நீரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.