அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தவறை செய்ய நான் தயாராக இல்லை. நாட்டுக்கு சாதகமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும்.
நம் நாட்டில் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தோம். வருமானம் இல்லாத போது மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்க பணம் அச்சிடப்பட்டது. இதனால், நாம் பெற்ற வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இறுதியாக, கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தோம். அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் போது, மக்களிடம் பணம் செலுத்தும் திறன் ஏற்படும். பணம் செலுத்தும் திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
தற்போது இலங்கையில் ஒரு டொலருக்காக சுமார் 310 ரூபாய் செலவிடப்படுகிறது. நாங்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தற்போது நாங்கள் பணியாற்றி வருகிறோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.