சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கே இவ்வாறு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, T56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு 300,000 ரூபாவும், ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.