இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இலங்கையில் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் அதற்காக விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் விரைவாக தமக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.