உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரேனின் நீா் மின் நிலையம் உட்பட அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது, ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில்10 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் செலன்ஸ்கி (Zelenskiy) குற்றம் சுமத்தியுள்ளார்.
மின் உட்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா 60 ட்ரோன்களையும், சுமாா் 90 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறினாா்.
இதுபோன்ற சரமாரியான வான்வழித் தாக்குதல்களை எதிா்கொள்வதற்குத் தேவையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் செலன்ஸ்கி வலியுறுத்தினாா்.
இதனிடையே குறித்து தாக்குதல் தொடர்பில் உக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கையில்,
‘நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உட்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷ்யா நேற்று முன்தினம்(21) தீவிர தாக்குதல் நடத்தியது.
இவ்வாண்டின் மின் உட்கட்டமைப்புகள் மீது, ரஷ்யா நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
கடந்த ஆண்டிலும் நாட்டின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடந்த ஆண்டைவிட மிகத் தீவிரமானதென“ தெரிவித்தனா்.
கடந்த 2 வருடங்களாக இடம்பெற்று வரும் உக்ரேன் – ரஷ்ய போரில், உக்ரேனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நோக்கி சுமார் 150 ஏவுகணை மற்றும் ஆளில்ல விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.